சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை!
சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக விதிமுறைகளை கடுமையாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, ட்ரோன்களுக்கு கட்டாய பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் மற்றும் குறிப்பிட்ட எடையை மீறும் ட்ரோன்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை, வணிக மற்றும் தொழில்சார் தேவைகளுக்காக ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு புதிய உத்தியோகபூர்வ உரிம முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை பெற தத்துவார்த்த தேர்வுகள், மருத்துவ பரிசோதனைகள், பாதுகாப்பு அனுமதி மற்றும் செயல்பாட்டு திறன் மதிப்பீடுகள் உள்ளிட்டவை அவசியமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை கருத்தில் கொண்டு, ட்ரோன் இறக்குமதி, விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படி நடைபெறுவதை உறுதி செய்ய அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோத இறக்குமதி மற்றும் அனுமதியற்ற ட்ரோன் பயன்பாட்டுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
