முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய விதிமுறைகள்!
உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாகாண சபைகளுடன் கலந்துரையாடல்களின் பின்னர் அவை வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளன.
இதன்படி, நாடு முழுவதும் இயங்கும் அனைத்து முதியோர் இல்லங்களும் புதிய விதிமுறைகளுக்கு அமைவாக செயல்பட வேண்டும். பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியோர்களை தங்க வைப்பதைத் தவிர்க்குமாறும் பாதுகாவலர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில முதியோர் இல்லங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்ற போதிலும், சில இடங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு மற்றும் தேவையான ஊழியர்கள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தரமற்ற நிறுவனங்களுக்கு இனி அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும், சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதுடன், அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும் முதியோர் பராமரிப்பு நிலையங்கள் 3 மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
