இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450ஐ கடந்தது!


இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே மிகப்பெரியதாக கருதப்படும் புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450ஐத் தாண்டியுள்ளது.

வடக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா, இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி முதல் இதுவரை மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட 92 நாள் அகழ்வாராய்ச்சியின் மூலம் 454 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மணமிட்ட நிலையில் (கால்களை மடக்கி அமர்ந்த நிலையில்) புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடு ஒன்று பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும், அதனை முழுமையாக மீட்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் கூறினார்.

மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 38ஆவது நாளான ஜூலை 20ஆம் திகதி புதிதாக மீட்கப்பட்ட 8 மனித எலும்புக்கூடுகளில் இரண்டு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மாத்திரம் மேலும் 6 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.