மகளை தாக்க முயன்ற மருமகன் உயிரிழப்பு: மாமனார் கைது!
அம்பலாந்தோட்டை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், மகளை காப்பாற்ற முயன்ற தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான மருமகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கும் மனைவிக்கும் இடையே நீண்டகாலமாக குடும்பப் பிரச்சினை நிலவி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று, மனைவி தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவன் அங்கு சென்று வீட்டின் நுழைவாயிலை வாகனத்தால் சேதப்படுத்திய பின்னர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அதன்பின் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்க முயன்றதாகவும், இதனைத் தடுக்க மகளின் தந்தை அருகில் இருந்த தடியால் தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த மருமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
