இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் ‘அல்லாமா முஹம்மது இக்பால்’ கல்வித்தொகைத் திட்டம்!


இலங்கை மாணவர்களுக்காக பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு (HEC) ‘அல்லாமா முஹம்மது இக்பால் கல்வித்தொகைத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) பட்டப்படிப்புகளை தொடர முழுமையான மற்றும் பகுதி அளவிலான நிதியுதவியுடன் கூடிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான கல்வி ஒத்துழைப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தெரிவு செய்யப்படும் மாணவர்கள் பாகிஸ்தானின் சமூக மற்றும் கலாசார அனுபவங்களைப் பெறுவதுடன், தங்களது சொந்த கலாசாரத்தையும் அங்குள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.

பொறியியல், இயற்கை அறிவியல், சமூக அறிவியல், கலை, மனிதநேயம், கட்டிடக்கலை, நுண்கலைகள், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் (IT), விவசாயம் மற்றும் ஊடகக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த கல்வித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

முழுமையான நிதியுதவி பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிச் செலவுகள், வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மற்றும் புத்தகக் கொடுப்பனவு ஆகியவை வழங்கப்படும். பகுதி அளவிலான கல்வித்தொகைகள் கல்விக் கட்டணத்தை மட்டும் உள்ளடக்கும்.

தகைமைகள்

  • மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளுக்கு குறைந்தது 65% பெறுபேறு அவசியம்.
  • முதுகலை மற்றும் கலாநிதி படிப்புகளுக்கு குறைந்தது 60% பெறுபேறு பெற்றிருக்க வேண்டும்.
  • இளங்கலைப் படிப்புகளுக்கு அதிகபட்ச வயது 23.
  • முதுகலைப் படிப்புகளுக்கு அதிகபட்ச வயது 35.
  • பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிகபட்ச வயது 40.

விண்ணப்பதாரர்கள் 2026 ஜூன் 25 ஆம் திகதிக்கு முன்னர் பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழுவின் (HEC) இணையத்தளத்தின் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் HEC நடத்தும் தகுதித் தேர்வில் தோற்ற வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள், பட்டப்படிப்பை முடித்த பின்னர் இலங்கைக்கு திரும்பி நாட்டின் தேசிய வளர்ச்சிக்குப் பங்களிப்பது கட்டாய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.