நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறக்கம்!


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி இன்று (12) அதிகாலை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதால் மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளது.

UL-606 என்ற விமானம் இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் சிட்னி நோக்கிப் புறப்பட்டது. அப்போது விமானத்தில் 217 பயணிகளும் 16 பணியாளர்களும் பயணித்திருந்தனர்.

மோசமான வானிலை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக, பாதுகாப்பு கருதி விமானி பயணத்தை இடைநிறுத்தி, அதிகாலை 1.40 மணியளவில் விமானத்தை பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

பின்னர் பயணிகளை சிட்னிக்கு அனுப்புவதற்காக அதே வகையைச் சேர்ந்த மற்றொரு ஏர்பஸ் A330 விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று காலை 6.06 மணியளவில் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மின்னல் தாக்கத்துக்கு உள்ளான விமானம் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பராமரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.