டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் : அரசின் முக்கிய விளக்கம்!


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் அச்சங்களுக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விளக்கம் வழங்கியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது காணப்படும் டொலர் மதிப்பு உயர்வு அல்லது ரூபாயின் பெறுமதி குறைவு என்பது நாட்டின் பொருளாதார நெருக்கடியின் அறிகுறி அல்ல என வலியுறுத்தியுள்ளார். மாறாக, மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்களின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்களை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையால் இலங்கை பொருளாதாரத்தில் சில தற்காலிக அதிர்வுகள் ஏற்பட்டிருந்தாலும், அவற்றை சமாளிக்க தேவையான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தையில் உருவாகும் ஊக வணிக நடவடிக்கைகள் மற்றும் தேவையற்ற அச்சம் காரணமாக டொலரின் பெறுமதியில் குறுகியகால மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க டொலரின் பெறுமதி 350 ரூபாயைத் தாண்டியிருந்த நிலையில், அரசின் தலையீடுகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் அது 330 ரூபாய் வரை குறைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் சிறிய அளவில் உயர்வு ஏற்பட்டிருந்தாலும், நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என்றும், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அல்லது வெளிநாட்டு நிதி நெருக்கடியைக் குறிக்கவில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

எனவே, டொலர் மாற்று விகிதத்தில் ஏற்படும் தற்போதைய ஏற்ற இறக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற பதற்றம் அடையாமல், அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைக்குமாறும் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.