முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!


ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அவருக்கு 18 இலட்சம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய லொட்டரி சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், 2006 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட போது, அவற்றின் உரிமையாளர்களுக்கு சாதகமாகச் செயற்பட்டு அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலேயே அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த சரண குணவர்தன, இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

வழக்கின் விசாரணைகள் மற்றும் தரப்புகளின் வாதங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.