நிதியமைச்சின் உதவிப்பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மர்ம மரணம் - விசாரணைக்கு இரு விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்!


நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகள் இரண்டு பிரதம பொலிஸ் ஆய்வாளர்களின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன.

ரங்க ராஜபக்சவின் உடல் நேற்று (30) பிற்பகல் குளியாப்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் பின்புறத் தோட்டப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்ப தகவல்களின் படி, அவர் நேற்று முற்பகல் சுமார் 10.00 மணியளவில் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றிருந்தார். பின்னர் பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் அவரது உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரிடமிருந்து மூன்று முறை வாக்குமூலம் பதிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு வெளிநாடு செல்லத் தடையுத்தரவும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் பிரேத பரிசோதனை இன்று (01) குளியாப்பிட்டி மருத்துவமனையில் நடைபெற உள்ளது.