இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு தீவிரமாக அதிகரித்து வருவதால் நோயாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியும், மருந்து விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் இந்த நிலையை உருவாக்கியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரூபாயின் மதிப்பு குறைதலும், அதிகரித்துவரும் பணவீப்பும் காரணமாக வெளிநாட்டு மருந்து விநியோகஸ்தர்கள் முறையான விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதில் விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, சில மருந்துகளை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்களும் தட்டுப்பாட்டை மேலும் மோசமாக்கியுள்ளன.
இந்த நிலையில், முக்கிய நோய்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்காததால் நோயாளர்கள் மருந்தகங்களில் மருந்துகளை பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக புற்றுநோய், சிறுநீரக மற்றும் கல்லீரல் நோயாளர்கள், அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள், தொற்றா நோய்களுக்கான சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலர் அவசர தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து அதிக செலவில் மருந்துகளை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இது பொதுமக்களுக்கு கூடுதல் நிதிசுமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையில் உடனடி தீர்வு எடுக்கப்படாவிட்டால், நாட்டின் சுகாதார சேவைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
