மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ‘சைக்கோ’ ஆசிரியர் கைது!


காலி நகரில் மாணவிகளை குறிவைத்து நடைபெற்ற “மை தெளிப்பு” சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி சரவந்துகடை சந்தி பகுதியில் வீதியால் சென்ற மாணவிகளின் வெள்ளை நிற சீருடைகளில், பின்னால் இருந்து அடையாளம் தெரியாத நபர் சிவப்பு நிற மை தெளித்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மாணவிகளும், பெற்றோர்களும் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்த கண்காணிப்பு காமராக்களின் (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் திட்டமிட்டு மாணவிகளை பின்தொடர்ந்து சென்று மை தெளிக்கும் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பு கோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காலியில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் கடந்த ஒரு மாதமாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, பொதுஇடங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வலுப்பெற்று வருகிறது.