நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் தற்போதைய நீர் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே நிலையில் தொடர்ந்தும் பேணுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
15.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்ட நீர் கட்டண நிர்ணயக் கொள்கைக்கு அமைவாக, பிரதான செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு நீர் விற்பனைக்கான அலகுச் செலவு அரையாண்டு அடிப்படையில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி அறிக்கையின் பகுப்பாய்வின்படி, தற்போதைய கட்டண முறை மூலம் செயல்பாட்டு செலவுகளை முழுமையாக ஈடுசெய்ய முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நீர் கட்டணத்தை உயர்த்தாமல் தற்போதைய நிலைபடி தொடரச் செய்வதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
