நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கு திசையில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையும் பலத்த காற்றுடனான சூழ்நிலையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் உள்ளிட்ட வங்காள விரிகுடா பகுதிகளில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அடுத்த 168 மணித்தியாலங்களுக்குள் (7 நாட்களுக்குள்) இந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் சூறாவளியாக மாறுவதற்கான சாத்தியம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், கடல்சார் ஊழியர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் காலநிலை மாற்றங்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வப்போது வெளியிடும் உத்தியோகபூர்வ முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
