வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் ஜூனில் ஆரம்பம்!
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரே உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் கே.பி.என்.டி.என். தேவப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கையில், இலக்கத் தகடுகள் அச்சிடுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் வெரஹெர வளாகத்தில் தேவையான இயந்திரங்களை ஏற்கனவே நிறுவியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஆரம்பகட்ட தொழில்நுட்ப பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதுடன், தொழில்நுட்ப நிபுணர்கள், ஏல மதிப்பீட்டு குழு மற்றும் உயர்மட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் South Asian Technologies (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் 2026 ஜனவரி 20 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டதுடன், 2026 மார்ச் 10 அன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்த நிபந்தனைகளின்படி, கையெழுத்திடப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதால், திட்டமிட்டபடி ஜூன் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிகள் தொடங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
