விஜய்யின் பதவியேற்பு விழா ஒத்திவைப்பு!


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேவையான பெரும்பான்மை இதுவரை உறுதியாகாததால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பதவியேற்பு ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று (07) மீண்டும் தமிழக ஆளுநர் அர்லேகரை  சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், ஆட்சியமைக்க தமக்கு அழைப்பு வழங்க வேண்டும் என விஜய் மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம், நேற்று காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளது. எனினும், ஆட்சியமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

அதன்படி, இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடமும் ஆதரவு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், ஆட்சியமைக்கும் உரிமையை கோரியிருந்தார். ஆனால், இதுவரை அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு வழங்கப்படவில்லை.

ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் முன்னதாகவே தொடங்கப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.