நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் : ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக விசாரணை!


மே தினக் கூட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கையும், அதன் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பதையும் குறிப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே அதனைப் பற்றிய தகவல்களை பொதுவெளியில் பகிர்வது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும் என்று அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் கருத்துக்கள் வெறும் பொதுவான அவதானிப்புகள் அல்ல; அதில் திகதிகள் மற்றும் காலக்கெடு தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளதால் இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தச் சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஜே.வி.பி. மேடைகளிலிருந்தே இனி நீதிமன்றத் தீர்ப்புகள் அறிவிக்கப்படுமா என அவர்கள் கேள்வி எழுப்பியதுடன், அதிகாரப் பிரிவு மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைக் காக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.