முற்றாக முடங்கிய கட்டுநாயக்க – மினுவாங்கொட வீதி!


மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நைகந்த உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால், அந்த வீதியில் வாகனப் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, கொழும்பிலிருந்து கட்டுநாயக்க வழியாக குருநாகல் அதிவேக நெடுஞ்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜா-எல மற்றும் மினுவாங்கொட வழியாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குருநாகல் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்களும் மினுவாங்கொட – ஜா-எல பாதையை மாற்று வழியாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹா பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மினுவாங்கொட, ஜா-எல மற்றும் சீதுவ வழியாக மாற்று பாதைகளில் பயணிக்குமாறும் காவல்துறை ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.