தன்சல் வழங்குவோருக்கு வெளியான அறிவிப்பு!


எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள தன்சல்கள் தொடர்பாக இதுவரை 2,388 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தன்சல்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மே மாதம் 29ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த மாத தொடக்கத்திலிருந்தே நாடு முழுவதும் தன்சல் பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி, அனைத்து சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகங்களிலும் தன்சல்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், நேற்று மாலை வரையான கணக்கெடுப்பின் அடிப்படையில் சுமார் 2,388 தன்சல்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தன்சல்களை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை வழங்குவது தொடர்பாக ஏற்பாட்டாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தன்சல் நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல், விரைவாக சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகரை (PHI) தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளுமாறும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.