வாகன விபத்து போல சித்தரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்ட கொலை!
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் துவிச்சக்கர வண்டி மீது கெப் ரக வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளை வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விசாரணைகளில், இந்த விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்டமாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற 24 வயதுடைய கெப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் நிலவிய பழைய முரண்பாடு காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
