வெள்ளப் பெருக்கு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அடுத்த 48 மணி நேரத்திற்குள் களனி ஆற்றை அண்மித்த தாழ்வான பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு நிலை உருவாகக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களனி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சுமார் 300 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பதிவாகியுள்ளதையடுத்து இந்த வெள்ள எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை 10.00 மணி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த எச்சரிக்கை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 10.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஹங்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, பியகம, கடுவலை, கொலன்னாவை, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்வான பகுதிகள் பாதிக்கப்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ள அபாயம் காணப்படும் வீதிகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
