மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய் தற்போது நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலின்படி, தியத்தலாவ பகுதியில் 28 நோயாளர்கள், வெலிமடை பகுதியில் 13 நோயாளர்கள் மற்றும் ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்கள் என புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் இந்த நோய் பரவி வந்தாலும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிகுறிகள் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கக்கூடியவை என்றும், உரிய மருத்துவ சிகிச்சையின் மூலம் நோயாளர்கள் குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நிலைமையை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மூளைக்காய்ச்சல் உணவு, நீர் மற்றும் நேரடி தொடர்பு மூலம் பரவக்கூடியது என்பதால், தற்போது நிலவும் மழைக்கால சூழ்நிலையும் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தானசாலைகளும் நோய் பரவல் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பாக செயற்படுமாறு அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.