சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்தரின் மார்ட்டின் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு!
இலங்கை மற்றும் கனடா நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் கேத்தரின் மார்ட்டின் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இருதரப்பினரும் ஜனநாயக ஆட்சி முறை, மனித உரிமைகள் பாதுகாப்பு, நிலையான இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் அரசியல் முன்னேற்றம் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும் என வலியுறுத்தினார். அதேவேளை, நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக சவால்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக “டித்வா” சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பாகவும் இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், வாழ்வாதார மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மேலும், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச ஆதரவு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, காலநிலை மாற்றத்துக்கு எதிராக கனடா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டியதுடன், “ஆக்ஸஸ் ஸ்ரீலங்கா” எனப்படும் ஐந்து மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான வேலைத்திட்டத்தையும் வரவேற்றார்.
இந்த திட்டம் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாயத்தை மேம்படுத்துதல், நிலையான நில மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை ஊக்குவித்தல், மேலும் வறண்ட பிரதேசங்களில் வாழும் பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


