வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் அறிமுகம்!


வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்காக புதிய கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தீவிரமாக அமல்படுத்தியுள்ளது.

இதன்படி, வெளிநாடு செல்லும் பிக்குகள் தங்கள் மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடமிருந்து கட்டாயமாக பரிந்துரைகளை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி முன்பே இருந்தாலும், இனி அது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் பௌத்த தேரர்கள் இடையிலான சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடைமுறை அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், மகாநாயக்க தேரர்களுக்கும் இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், பதிவாளர் தேரர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருடன் அவசர ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. அதன்படி, பௌத்த தற்காலிக கட்டளைச் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆம் பிரிவுகளின் கீழ், மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான குழுவுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை, அண்மையில் தாய்லாந்திலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 22 பௌத்த பிக்குகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.