நடிகர் விஜய் விவாகரத்து வழக்கு : நீதிபதி திடீரென இடமாற்றம்!


தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென மாற்றப்பட்டுள்ளார். 

அந்த நீதிமன்ற நீதிபதி எழிலரசி தற்போது விழுப்புரம் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் நேரில் முன்னிலையாவதற்கு பதிலாக காணொளி மூலம் ஆஜராக அனுமதி வழங்கப்பட்டிருந்த சூழலில் இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கு, தற்போது ஜூன் 15ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணிகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜீவனாம்சம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பங்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணைக்காக விஜய்க்கு முன்பே நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. எனினும், தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக நேரில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டதால், காணொளி மூலம் முன்னிலையாக அனுமதி கோரப்பட்டு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அரசியல் மற்றும் திரையுலகில் முக்கிய இடத்தை வகிக்கும் விஜய்யின் விவாகரத்து வழக்கு மற்றும் நீதிபதி மாற்றம் தொடர்பான இந்த விடயங்கள் சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.