நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை - 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, 6 மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே இந்த அவசர அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழைவீழ்ச்சி அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், இரண்டாம் நிலை எச்சரிக்கை பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.
அதேவேளை, மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், அப்பகுதிகளில் அபாய நிலை மிகவும் தீவிரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள் அல்லது மின் கம்பங்கள் சாய்வடைதல், திடீரென நீரூற்றுகள் உருவாகுதல் போன்ற மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
