வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டும் இதுவரை உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாத வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை, எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுச் செல்லுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வாகன உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகள் மற்றும் கொழும்பு நாரஹேன்பிட்டி தலைமையகத்தில் சேர்த்து சுமார் 100,000 வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் குவிந்து இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அச்சிடப்பட்ட பல இலக்கத் தகடுகள் விண்ணப்பதாரர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாததே இந்த நிலைக்கு காரணமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள் தங்களுக்கான இலக்கத் தகடுகளை நாரஹேன்பிட்டி அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது மாவட்டச் செயலகங்களில் செயல்படும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள கிளை அலுவலகங்கள் மூலம் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் அல்லது விசாரணைகளுக்காக பொதுமக்கள் 011-2033333 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாக வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் பிரிவை தொடர்புகொள்ளலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
