வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 28 மாணவர்களில் 14 பேருக்கு மூளைக்காய்ச்சல் உறுதி!


பதுளை மாவட்டத்தின் வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ பகுதிகளைச் சேர்ந்த பல பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெலிமடை ஆதார வைத்தியசாலையில் 10 மாணவர்களும், தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் 18 மாணவர்களும் சிகிச்சை பெற்று வருவதுடன், மொத்தமாக 28 மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களில் நான்கு பேருக்கு மூளைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் 10 பேருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காய்ச்சல், கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, தோலில் தடிப்புகள் அல்லது கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்லுமாறும், பொதுச் சுகாதார பரிசோதகரை அறிவிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், நோய் பரவலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களைத் தவிர்த்தல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.