லெபனான் முழுவதும் இஸ்ரேல் பாரிய தாக்குதல் – ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம்!


லெபனான் முழுவதும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் விளைவாக, குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர். பொதுச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை அவரது ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டார்.

அதில், “பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது. இந்த உயிரிழப்புகளை பொதுச் செயலாளர் தீவிரமாகக் கண்டிக்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், லெபனானில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த முயற்சிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடனடியாக மோதல்களை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளிடமும் பொதுச் செயலாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த மோதலுக்கு இராணுவ ரீதியான தீர்வு எதுவும் இல்லை என்பதையும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.