நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி ; பெரும் போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சடலம்!
காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு இணையும் கெசல்கமுவ ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் தோட்டத்தைச் சேர்ந்த, நோர்வூட் அயர்வி தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய வாகீசன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் நேற்று மதியம் கெசல்கமுவ ஓயாவில் உள்ள ‘சில்வர் வாலா’ எனப்படும் இடத்திற்கு தனது நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளார்.
அங்கு அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட நண்பர்கள், அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நீரின் அதிக ஆழம் காரணமாக, அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்து, அந்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளார்.
நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், நோர்வூட் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, உள்ளூர் மக்களின் உதவியுடன் காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கையை நேற்று முதல் மேற்கொண்டனர்.
எனினும், நீரில் மூழ்கிய மாணவரை மீட்க முடியாத நிலையில், இன்று (05) இராணுவ நீர்மூழ்கி வீரர்களை வரவழைத்து குறித்த ஆற்றுப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது.
சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், ஆற்றில் இருந்து மாணவரின் சடலம் மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
