விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை!


சந்தையில் உரத்தின் விலையை கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தின் தலையீட்டுடன் புதிய ஒதுக்கீட்டு முறை (Quota System) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சந்தையில் நிலவும் உர விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் உரத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் இன்று (05) நாட்டை வந்தடையவுள்ளது.

இம்முறை சிறுபோக நெற்செய்கைக்கு மொத்தம் 80,000 தொன் யூரியா உரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மேலதிக யூரியா உர இருப்புகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், விவசாயிகளுக்கான உர மானியத்தை பருவகாலத்தின் ஆரம்பத்திலேயே முழுமையாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.