மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே. செனதீர இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று (08) கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோது அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.
பண்டிகைக் காலங்களில் சிறிய விபத்துகள் ஏற்பட்டாலும் கூட, சம்பந்தப்பட்ட சாரதிகள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சாரதிகளும் பாதசாரிகளும் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் வீதி நெரிசலைக் குறைத்து, உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில், பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
