யாழிற்கு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம் ; மகிழ்ச்சியில் பயணிகள்!


வடக்கு ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை (09) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை ரயில் சேவைகள் வழமைபோல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் நகரிடை ரயிலும், யாழ்ப்பாணம் இரவு தபால் ரயிலும் இன்று முதல் இயக்கப்படுகின்றன. மேலும், யாழ் தேவி ரயில் நாளை முதல் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திட்வா” சூறாவளியால் வடக்கு ரயில் பாதை 14 இடங்களில் சேதமடைந்திருந்தது. இதனால் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல் சில ரயில்கள் வேகக் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே இயக்கப்பட்டன. பின்னர், ஜனவரி 19 முதல் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தற்போது சேதமடைந்த அந்த 14 இடங்களும் நிரந்தரமாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் வடக்கு ரயில் பாதையில் ரயில்கள் வழக்கமான வேகத்தில் தடையின்றி இயக்கப்படுகின்றன என்று ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.