புதன்கிழமை காலைக்குள் உலக வரைபடத்தில் ஈரான் இருக்காது! டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானை “ஒரே இரவில் அழித்துவிட முடியும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (07) இரவு 8.00 மணியுடன் முடிவடைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே டிரம்ப் இதனை தெரிவித்தார்.
இன்று இரவு 8.00 மணிக்குள் தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கைக்கு ஈரான் வரவில்லை என்றால், அந்த நாட்டிற்கு எதிராக கடுமையான அழிவுகரமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்.
நள்ளிரவுக்குள் ஈரானின் பாலங்கள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு, ஈரான் மீண்டும் கற்காலத்திற்குத் தள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் பேசிய டிரம்ப், இன்றைய தினத்திற்குப் பிறகு ஈரானுக்கு மீண்டும் எந்தவொரு கால அவகாசமும் வழங்கப்படாது. இந்தப் போருக்கு ஆதரவு வழங்காத நாடுகளின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த இராணுவ வீரரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர் விரிவாக விளக்கினார்.
அந்த நடவடிக்கை மிகவும் பயங்கரமானது என்றும், உயிரைப் பணயம் வைத்துச் செயற்பட்ட வீரர்களுக்கு தனது மரியாதையைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, மத்திய கிழக்கின் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர முன்வைக்கப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த யோசனைக்கும் ஈரான் பதிலளித்துள்ளது. ஈரான், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு பதிலாக போரை நிரந்தரமாக முடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, 10 அம்சங்களைக் கொண்ட கோரிக்கை அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.
