கள்ளத்தொடர்புக்காக கணவரைக் கொல்ல சதி: பாலில் தூக்க மாத்திரை கலந்து, விஷப்பாம்பால் கடிக்க வைத்த மனைவி கைது!


இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், கள்ளத்தொடர்பைத் தொடரும் நோக்கில் கணவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும், அவரது காதலனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் இணைந்து "கிருஷ்ணா" என்ற பெயரில் பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்த நிலையில், அந்தப் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணியாற்றிய நபருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த உறவுக்கு தடையாக இருந்த கணவரைக் கொலை செய்ய இருவரும் முதலில் சாலை விபத்து போல திட்டமிட்டதாகவும், அந்தத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து புதிய திட்டம் தீட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மனைவி தனது கணவருக்குப் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர், படுக்கையறையில் விஷப்பாம்பை விடுத்து கடிக்கச் செய்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கணவரின் உயிர்காப்பீட்டுத் தொகையான இந்திய ரூபாய் 20 லட்சத்தைப் பெறுவதும், சந்தேகம் ஏற்படாமல் இயற்கை மரணம் போல் சம்பவத்தை சித்தரிப்பதும்தான் இந்தக் கொலையின் நோக்கமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இது இயற்கை மரணமாகக் கருதப்பட்ட போதிலும், பொலிஸாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.