ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி நடைபெற்று வரும் பாரிய நிதி மோசடி - பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!


ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி நடைபெற்று வரும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தனிப்பட்ட தகவல் திருட்டு தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்தை ஒத்த எண்களை பயன்படுத்தி மூன்றாம் தரப்பினரால் மோசடிகள் நடைபெறுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக +94115226126, 0115226126, 0771167739, 0742756098 ஆகிய எண்கள் மூலம் பொதுமக்களை தொடர்புகொண்டு தகவல்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், அரச இலச்சினையை பயன்படுத்தி போலியான செயலி ஒன்றை உருவாக்கி “டிஜிட்டல் அடையாள அட்டை” அல்லது “E-ID” வழங்கப்படும் என கூறி தனிப்பட்ட தகவல்களை சேகரித்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக, திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போன்ற தோற்றமளிக்கும் https://drpgov-lk.com என்ற போலி இணைய முகவரி மூலமும் தகவல்கள் பெறப்படுகின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை டிஜிட்டல் அடையாள அட்டைக்கான எந்தவொரு பதிவு நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவில்லை என திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, அறியப்படாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.