வீட்டு உரிமையாளர்களுக்கு பாதுகாப்பற்ற செயல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ள பொலிஸார்!


கடுவெல, ரணால பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர், வீட்டைப் பூட்டிவிட்டு திறப்பை வாசலில் இருந்த ஒரு காலணிக்குள் மறைத்து வைத்து சென்றிருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், திறப்பை எளிதாகக் கண்டெடுத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

வீட்டில் இருந்த பெறுமதியான தங்க நகைகளை அந்த நபர் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளின் வசதிக்காகவே திறப்பை வெளியில் மறைத்து வைத்ததாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். எனினும், இதனால் தற்போது பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்துள்ளது.

பாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளுக்காகவோ அல்லது தாமதத்தைத் தவிர்க்கவோ வாசற்படிக்கு அடியில் அல்லது பூந்தொட்டிகளில் திறப்பை வைப்பதை, திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக நவகமுவ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் இவ்வாறான பாதுகாப்பற்ற செயல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.