4 இலட்சத்தை தொட்ட தங்க விலை!
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (3) தங்கத்தின் விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.
இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 1,000 ரூபாயால் அதிகரித்து 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 1,000 ரூபாயால் அதிகரித்து 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, இந்திய அரசு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட அனைத்து வகையான ஆபரணங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மேலும், ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், Letter of Credit, முன்பணம் அல்லது கப்பல் அனுப்பும் நிலை போன்றவற்றுக்கும் எந்தவித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
