திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட சம்பவம் : நிதி அமைச்சின் செயலாளர் வீட்டை முற்றுகையிட சென்றோர் மீது சாணி வீச்சு!
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மீது எதிர்ப்புத் தெரிவிக்க நவ ஜனதா பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் குழு இன்று (28) காலை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், சுகீஸ்வர பண்டார தலைமையிலான குழுவினர் பெலவத்தை, அகுரேகொட பகுதியில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் குறித்த ஹேக் சம்பவத்துக்கு அரசாங்கத்தின் பொறுப்பும் நிர்வாகக் குறைபாடும் உள்ளதாக கூறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டின் முன்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், எதிர்ப்பு நடவடிக்கையின் போது நிலைமை திடீரென பதற்றமாக மாறியுள்ளது. இதன்போது, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட சிலரது மீது பொதுமக்கள் சிலர் முட்டை மற்றும் சாணியால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலையும் உருவாகியுள்ளது.
சம்பவம் மேலும் தீவிரமடையாமல் இருக்க உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் நிலைமையை கட்டுப்படுத்தி இரு தரப்பினரையும் பிரித்து அமைதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவரை இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்பட்டார்களா அல்லது காயம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
திறைசேரி ஹேக் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், இந்த எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் ஏற்பட்ட முறுகல் நிலை அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
