பொகவந்தலாவவில் பாடசாலை பேருந்து விபத்து – 10 மாணவர்களின் நிலை கவலைக்கிடம்!
பொகவந்தலாவ ராணிகாடு பகுதியில் இருந்து நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் சிகிச்சை பெறும் மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து இன்று காலை சுமார் 7.30 மணியளவில், ராணிகாடு – பொகவந்தலாவ பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மொத்தம் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்துள்ளார். காயமடைந்த அனைவரும் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் கிடைத்த தகவலின்படி, பயணத்தில் இருந்த தனியார் பேருந்தின் பிரேக் தொகுதியில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், சாரதி அதனை வீதியோரத்தில் இருந்த மண் திட்டில் மோதச் செய்து நிறுத்த முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் கடுமையாக காயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


