கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பான வழக்கில் 22 பேரில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பான வழக்கில், 22 பேரில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து வருகை தந்த 22 பிக்குகள், சுமார் 110 கிலோகிராம் “குஷ்” மற்றும் “ஹேஷ்” வகை போதைப்பொருட்களை பயணப் பொதிகளில் மறைத்து கொண்டு வந்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட 22 பிக்குகளில் 20 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியை கருத்தில் கொண்டு, மகாநாயக்க தேரர்களுடன் புத்தசாசன அமைச்சில் இன்று (28) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர தெரிவித்துள்ளார்.
