யாழில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் : 17 வயதான 3 மாணவர்கள் கைது!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சக பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்று, சமீபத்தில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆறு மாணவர்கள் இந்தச் செயல்களில் ஈடுபட்டதாக பாடசாலை அதிபர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் முதற்கட்டமாக 17 வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை (28) கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன், குறித்த மாணவர்களை புதன்கிழமை (29) வரை அச்சுவேலி பகுதியில் உள்ள சான்று பெற்ற நன்னடத்தைப் பாடசாலையில் (தடுப்புக்காவல் இல்லம்) தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்ற மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மருதங்கேணி பொலிஸாரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
