எரிவாயு விநியோகத்தில் நிலவும் முறைகேடு - QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை!
தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல; தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகிறது. சந்தையில் எரிவாயு எங்கே உள்ளது? என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கேள்வி எழுப்பினார்.
தேசிய நுகர்வோர் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் நிலவும் போர்ச் சூழல் எமக்கு இன்னும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், நாட்டில் உள்ள கையிருப்புகளை காரணம் காட்டி அநியாயமான முறையில் விலைகளை உயர்த்துவது நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கிறது என அவர் கூறினார்.
மேலும், “ஏன் இந்த அறிவிப்புகளை நள்ளிரவில் வெளியிட வேண்டும்? பகல் 10 மணிக்கு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்க முடியாதா? நள்ளிரவில் விலையை உயர்த்துவதால், மறுநாள் காலை சந்தையில் மருந்துகள் முதல் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கின்றன. அரசாங்கம் ஒன்றைச் செய்யும் போது, தனியார் துறையினரும் தன்னிச்சையாக விலைகளை உயர்த்தி இலாபம் ஈட்டுகின்றனர்” என அவர் குற்றஞ்சாட்டினார்.
இன்று எரிவாயு விலையை 300 ரூபா மற்றும் 120 ரூபா என இரு வேறு அளவுகளில் உயர்த்தியுள்ளனர். ஆனால், சந்தையில் எரிவாயு கிடைப்பதில்லை. ஒரு ஹோட்டலில் குறைந்தபட்சம் 10 சிலிண்டர்கள் இருக்கும். லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ என தலா ஐந்து சிலிண்டர்களை வைத்திருப்பார்கள்.
அவர்களின் அன்றாடத் தேவைக்கு 3 அல்லது 4 சிலிண்டர்களே போதுமானதாக இருக்கும். மீதமுள்ள 6 அல்லது 7 சிலிண்டர்கள் வெற்றாகவே இருக்கும். சந்தைக்கு விநியோகம் வந்தவுடன், குளத்தில் மீன்களுக்கு உணவு போடுவது போல, இந்த வெற்றுச் சிலிண்டர்களை வைத்திருப்பவர்கள் அனைத்தையும் பதுக்கிக் கொள்கின்றனர். இதனால் சாதாரண குடும்பங்களுக்கு எரிவாயு கிடைப்பதில்லை.
எரிவாயு விநியோகத்தில் நிலவும் இந்த முறைகேடுகளைத் தவிர்க்க உடனடியாக QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் எரிவாயு நிறுவனங்களிடம் நுகர்வோர் தொடர்பான சரியான தரவுத்தளம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிதாகத் திருமணமான தம்பதிகள் ஒரு சிலிண்டர் கூட இல்லாமல் தவிக்கும் நிலையில், சிலர் பல சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்பது தடுக்கப்பட வேண்டும். பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் கூட பிள்ளைகளுக்கான உணவை சமைக்க இன்று எரிவாயு இல்லாத நிலை உள்ளது.
நுகர்வோர் எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியாது; அது சிலிண்டரில் இருக்கும் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே சந்தைக்கு விடப்படும் ஒரு இலட்சம் சிலிண்டர்களில் குறைந்தது 98 சதவீதமாவது உண்மையான நுகர்வோரைச் சென்றடைகிறதா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் இது ஒரு பெரிய சமூக அநீதியாக மாறும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், பல மாதங்களுக்கு முன்பே குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு, சீனி போன்ற பொருட்களை இன்று போரைக் காரணம் காட்டி அதிக விலையில் விற்கின்றனர். இலாபம் ஈட்டுவதற்காக நுகர்வோரை வாட்டும் இந்தச் செயல்களைத் தடுத்து, அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
