இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக விசேட பேருந்து சேவை!
மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் விசேட முன்னுரிமை பேருந்து சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் எளிதில் ஏறக்கூடிய தாழ்ந்த தளம் (Low-floor) கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
33 ஆசனங்களைக் கொண்ட இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் சுமார் 80 பயணிகள் பயணிக்க முடியும். மேலும் சக்கர நாற்காலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
முன்னோடி திட்டமாக, மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரை காலை மற்றும் மாலை நேரங்களில் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையையும் நேரடியாக இணைக்கும் வகையில் இந்த சேவை அமையும்.
இந்த சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பேருந்து தொழில்நுட்பம் தொடர்பாக விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பேருந்துகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
