ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு அவசர பாதுகாப்பு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சவூதி அரேபியாவின் வான்பரப்பில் இடைமறிக்கப்படும் ஏவுகணைகள், ட்ரோன்கள் அல்லது அவை வீழ்ந்த இடங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் தொடர்பான காணொளிகளைப் பதிவு செய்வதோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வதோ கடும் குற்றமாகக் கருதப்படும் எனத் தூதரகம் எச்சரித்துள்ளது.
தாக்குதல்கள் நடைபெறும் போதோ அல்லது அதன் பின்னரோ அந்த இடங்களைப் படம்பிடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அல்லது காட்சிகளை வாட்ஸ்அப், முகநூல் போன்ற தளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்.
இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்படலாம் என்பதோடு, கடுமையான நடவடிக்கைக்களுக்கு உள்ளாக்கப்படலாம்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சவூதி பாதுகாப்பு அமைச்சகம் வழங்கும் உத்தியோகபூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
