மலைப்பாம்புடன் நடனமாடிய யுவதி; கொழும்பு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வொன்றில் பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்பை தனது கழுத்தில் சுற்றியவாறு ஆபத்தான முறையில் நடனமாடிய யுவதியை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேத்மி ஹிரண்யா என்ற யுவதியை கைது செய்யுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சம்பவத்தின் போது, மலைப்பாம்பை ஆபத்தான முறையில் கையாளப்பட்டதாகவும், இதன் மூலம் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க வனவிலங்கு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு யுவதிக்கு முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர் அதனை புறக்கணித்து சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஒப்பனை கலைஞர் சந்திமால் ஜயசிங்கவிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
