மட்டக்களப்பை உலுக்கிய விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி; வேலையின்றி சொத்து சேர்த்துள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள்!


மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிகாரி ஒருவரின் தகவலின்படி, சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களின் உறவினர்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, சில உறவினர்கள் எந்தவிதமான தொழிலிலும் ஈடுபடாமல் இருந்தபோதிலும், சொத்துகளைச் சேர்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் முச்சக்கர வண்டிகள் மற்றும் வீடுகளை கொள்வனவு செய்ய முயன்றிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், இத்தகைய சொத்துகளை வாங்க அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, மேலும் அவர்கள் சந்தேகநபர்களுடன் தொடர்புடையவர்களா என்பதையும் மையமாகக் கொண்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், முக்கிய சந்தேகநபரான முச்சக்கர வண்டி சாரதி, நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்தக் குழுவினர் மேலும் பல சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.