நாட்டில் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை : விலங்குகளுக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை காரணமாக செல்லப்பிராணிகள், பண்ணை கால்நடைகள் மற்றும் பறவைகள் பல்வேறு சுகாதார ஆபத்துகளை எதிர்நோக்கி வருகின்றன என கால்நடை வைத்தியர் உதித்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பத்தால் விலங்குகளில் வெப்ப பக்கவாதம் மற்றும் உடல் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுடன், கடுமையான நிலையில் இது உறுப்புச் செயலிழப்பு அல்லது உயிரிழப்புக்கும் வழிவகுக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார். கண்கள் உள்ளிழுந்து காணப்படுதல், வாய் உலர்வு, இதயத் துடிப்பு வேகமாதல், சோம்பல் மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படுமானால் அவற்றை அவதானிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பத்தினால் விலங்குகளின் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறுவதால், அவற்றுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்குவது மிகவும் அவசியம். கறவை மாடுகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 120 லீற்றர் தண்ணீர் தேவைப்படலாம் என்றும், செல்லப்பிராணிகள் ஆரோக்கியமாக இருக்க குறைந்தது 150 மில்லி லீற்றர் நீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் செல்லப்பிராணிகளை வீட்டில் விட்டுச் செல்பவர்கள் போதிய காற்றோட்டம் மற்றும் மின்விசிறி வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், பறவைகள் மற்றும் ஏனைய விலங்குகளுக்கு எப்போதும் சுத்தமான குடிநீர் மற்றும் நிழலான இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விலங்குகளின் உடல் வெப்பத்தை குறைக்க அவற்றைக் குளிக்க விடுதல் அல்லது உரோமங்களை நனைத்தல் உதவிகரமாகும்.
கடும் வெப்பம் நிலவும் நேரங்களில் விலங்குகளை கடினமான உடற்பயிற்சி அல்லது வேலைகளில் ஈடுபடுத்தாமல் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக குட்டிகள், வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்தியர் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
