இலங்கையில் மேலும் தீவிரமடையும் வெப்பம்; இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாடுமாறு எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் வாரங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதுகுறித்து முக்கிய விளக்கங்களை வழங்கினார். சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதாலும், உலகளாவிய காலநிலை மாற்றங்களினாலும் இம்முறை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த நிலைமை உச்சத்தை எட்டும் என வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் இந்த நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்ல வேண்டிய சூழலில் வெள்ளை அல்லது இளநிற ஆடைகள் அணிவதும், குடை அல்லது தொப்பி பயன்படுத்துவதும் அவசியமாகும்.
உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதனுடன் ஜீவனி போன்ற பானங்கள் அல்லது உப்பு கலந்த திரவங்களையும் எடுத்துக்கொள்ளலாம்.
தற்போது பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் மற்றும் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதால், மாணவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் மாணவர்களுக்கு தசைப்பிடிப்பு, வாந்தி அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். மேலும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது தேவையான மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துவது பாடசாலை நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு போன்ற நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் இந்த அதிக வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். எனவே இவர்களின் ஆரோக்கியம் தொடர்பில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சப்ரகமுவ மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளிலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரத்தில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
.jpg)