நாட்டில் அடையாளம் காணப்படாத 5,000 காசநோயாளர்கள் - சுகாதாரத்துறை எச்சரிக்கை!


நாட்டில் சுமார் 5,000 காசநோயாளர்கள் சமூகத்தில் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய காசநோய் கட்டுப்பாட்டு மற்றும் தொற்றுநோய் தடுப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரமிதா சாந்திலதா இந்தத் தகவலை வெளியிட்டார்.

கடந்த ஆண்டில் நாட்டில் உத்தியோகபூர்வமாக 8,726 காசநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் ஆண்கள் 5,622 பேர் அடங்குவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புறங்களில் தீவிர கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், அதிகளவிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தொற்றுநோய்களினால் ஏற்படும் மரணங்களில் காசநோய் முதன்மையான காரணியாக உள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் இருமல், தெளிவற்ற காரணங்களால் உடல் எடை குறைதல், குறைந்த அளவிலான காய்ச்சல்,உணவு உண்பதில் நாட்டம் குறைதல் ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சுவாச சிகிச்சை நிலையங்களை அணுகுமாறு கோரிக்கை விடுத்தார்.