12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை!
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2015 ஆம் ஆண்டு 12 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து, சான்றுப் பொருட்களுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இந்த வழக்கு ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் தொடர்ந்தன. சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை முன்னெடுத்தது.
வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இன்று (09) கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A. G. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி குற்றவாளிக்கு 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இழப்பீட்டை செலுத்தத் தவறினால் 2 ஆண்டு சாதாரண சிறைத்தண்டனை, அத்துடன் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அதனை செலுத்தத் தவறினால் 3 மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
